06 அக்டோபர், 2010 - பிரசுர நேரம் 13:40 ஜிஎம்டி
இந்தியாவில் புதிய மொழி
இந்தியாவின் வடகிழக்கில் தொலைதூரத்து ஒதுக்குப்புறப் பகுதி ஒன்றில் புதிய மொழி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கோரோ என்று அழைக்கப்படும் இந்த மொழி இந்தியாவின் வடகிழக்கில் இமயமலை பகுதியில் உள்ள அருணாச்சல பிரதேசத்தில் பேசப்படுவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
அந்தப் பகுதியில் மொழி ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஒரு பயணத்தின்போது இனம் காணப்பட்டுள்ள இந்தக் கோரோ மொழி, அது சார்ந்த மொழிக் குடும்பத்திலிருந்து குறிப்பிடத்தக்க அளவில் மாறுபட்டு இருப்பது தெரியவந்துள்ளது.
தொலைக்காட்சி நிகழ்ச்சிக்காக ஆய்வு
நேஷனல் ஜியாகரஃபிக் தொலைக்காட்சிக்காக அழிந்து வரும் மொழிகள் குறித்த ஒரு நிகழ்ச்சிக்கான தயாரிப்பில் நிபுணர்கள் ஈடுபட்டிருந்தபோதே மிகச் சிலரால் இந்தக் கோரா மொழி பேசப்படுவது தெரியவந்தது.
அருணாச்சல பிரதேசத்தின் தொலைதூரத்து ஒதுக்குப்புறப் பகுதிகளில் சிறிதளவே அறியப்பட்டிருந்த வேறு இரண்டு மொழிகளை தேடிச் சென்றபோதுதான், இது வரை பதிவு செய்யப்படாததும், முற்றிலும் மாறுபட்டதுமாக இருந்த இந்தக் கோரோ மொழியை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
இந்த மொழியானது இந்தியாவில் பேசப்படும் 150 மொழிகளை உள்ளடக்கிய திபேத்திய பர்மிய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தது என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆனாலும் கோரோ மொழியுடன் நெருங்கிய தொடர்புடைய வேறு எந்த மொழியும் இந்த மொழிக் குடும்பத்தில் இல்லை என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
அழிவின் விளிம்பில்...
உலகில் தற்போது அறியப்பட்டுள்ள 6909 மொழிகளில் பாதியளவு அழிந்து போகக் கூடிய நிலையில் உள்ளது என்று கருதப்படுகிறது. அந்த வகையில் கோரோ மொழியும் பலவீனமான நிலையிலேயே உள்ளது.
கோரோ மொழி எழுத்து வடிவில் இல்லை என்பதும் அதை தற்போது 800 முதல் 1200 பேர் வரையிலானவர்களே பேசிவருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
19 ஜூன், 2010 - பிரசுர நேரம் 16:58 ஜிஎம்டி
சோழர் செப்பேடுகள் கண்டுபிடிப்பு
பிற்காலச் சோழர்களின் சரித்திரம் அடங்கிய பழங்கால செப்பேடுகள் மயிலாடுதுறையை ஒட்டிய கிராமம் ஒன்றிலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில், நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை வட்டத்தில், மயிலாடுதுறையிலிருந்து ஆனதாண்டவபுரம் சாலையில் இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் பிற்காலச் சோழர் காலத்தில் கட்டப்பட்ட கைலாசநாதர் கோயில் உள்ளது.
தமிழக அரசின் இந்து சமய அற நிலையத் துறை மூலம் இந்தக் கோயிலில் முன் மண்டபம் கட்டும் பணிக்காக குழி தோண்டியபோது, பத்து அடி ஆழத்தில் சோழர் காலத்தைச் சார்ந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த செப்பேடுகள், 12 செப்புத் திருமேனிகள், பூசைப் பொருள்கள், வாத்தியக் கருவிகள், போன்றவை கிடைத்துள்ளன.
கிடைத்துள்ள புதிய செப்பேடுகள் மூலம் பல்லவர்களிடமிருந்து தஞ்சாவூரை சோழர்கள் கைப்பற்றியதாக, ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
முத்தரையர்கள் என்ற சிறு மன்னர்களிடமிருந்து தஞ்சையை சோழர்கள் கைப்பற்றியதாகவே இது வரை வரலாற்று ஆசிரியர்கள் நம்பியிருந்ததாகவும், ஆனால் இந்த செப்பேடுகள் தஞ்சை பற்றி முன்பு அறியப்படாத விபரங்களைத் தருவதாகவும் ஆய்வாளரும் தொல்லியல் துறையின் முன்னாள் இயக்குனருமான ரா.நாகசாமி தமிழோசையிடம் தெரிவித்தார் .
தற்போது கிடைத்திருப்பவைதான் இந்தியாவிலேயே இதுவரையில்லாத அளவுக்கு மிகப் பெரிய அளவிலான செப்பேட்டுத் தொகுதிகள் ஆகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இச்செப்பேடுகள் தமிழிலும் சமஸ்கிரத்திலும் எழுதப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.
இந்த செப்பேடுகள் கிபி 1053 ஆம் ஆண்டில் எழுதப்பட்டிருக்கலாம் என்று தமிழக முதல்வர் மு.கருணாநிதி கூறியுள்ளார்.
இந்த செப்பேடுகளை கங்கை கொண்ட சோழபுரத்தை நிர்மாணித்த இராஜேந்திர சோழனின் இரண்டாவது மகனான இரண்டாவது ராஜேந்திரன் வெளியிட்டுள்ளார்.
இந்த செப்பேடுகள் செய்யுள் வடிவில் எழுதப்பட்டுள்ளதாகவும், போரை நேரில் பார்த்த ஒருவர் அதை வருணிப்பதுபோல இந்த தகவல்கள் அமைந்துள்ளன என்றும் நாகசாமி குறிப்பிட்டார்.
19 ஜூன், 2010 - பிரசுர நேரம் 12:55 ஜிஎம்டி
தேனீர் பழக்கம் இருதயத்துக்கு பலம்
அடிக்கடி டீ காஃபி குடிப்பவர்களுக்கு இருதய நோய்கள் வருவதற்கான ஆபத்து குறைகிறது என்று குறிப்புணர்த்தும் புதிய அறிவியல் ஆதாரங்கள் கிடைத்துள்ளன.
கிட்டத்தட்ட நாற்பதாயிரம் பேரை பதிமூன்று ஆண்டுகளாக கண்காணித்து இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளதாக நெதர்லாந்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
அமெரிக்கன் ஹார்ட் அஸ்ஸொஸியேஷன் என்ற அமைப்பின் சஞ்சிகையில் இந்த ஆய்வு வெளியாகியுள்ளது.
டீ குடிக்கும் பழக்கம் இல்லாதவர்களுடன் ஒப்பிடுகையில் ஒரு நாளில் ஆறு தடவை டீ அருந்துபவர்களுக்கு இருதயக் கோளாறுகள் வருவதற்கான ஆபத்து மூன்றில் ஒரு பங்கு குறைவு என்று இந்த ஆராய்ச்சி கூறுகிறது.
காஃபி குடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கும் நன்மை ஓரளவுக்கு இருக்கிறது. ஆனால் டீ குடிப்பவர்களுக்கு கிடைக்கும் அளவுக்கு நன்மை காஃபியில் இல்லை.
ஒரு நாளில் இரண்டு முதல் நான்கு கோப்பைகள் டீ அருந்துபவர்களுக்கு அதனை விட குறைவாக டீ அருந்துபவர்களைக் காட்டிலும் இருதய நோய் வருவதற்கான ஆபத்து இருபது சதவீதம் குறைவாக உள்ளது என்றும் இந்த ஆராய்ச்சி கூறுகிறது.
ஆனால் குடிக்கும் டீயின் அளவை அதிகரித்துக்கொண்டே போனால், ஆபத்தின் அளவு மென்மேலும் குறைகிறது என்றில்லை. ஒரு கட்டத்தில் இந்தப் பலன் நின்று போய்விடுகிறது.
நெதர்லாந்தில் மக்கள் டீ குடிக்கும்போது அதில் சில துளிகள்தான் பால் விடுவார்கள், ஆனால் இந்தியர்கள் இலங்கையர்கள் எல்லாம் மொத்தமாக பாலிலோ அல்லது தண்ணீருக்கு சமமான பாலிலோ டீ அருந்துபவர்கள் என்பதை மறந்துவிடக்கூடாது. அந்த அளவுக்கு பால் விட்டு டீ குடிக்கும்போது இப்படியான மருத்துவ பலன் கிடைக்குமா என்பது தெரியவில்லை.
டீயில் இருக்கும் ப்லவனாய்ட்ஸ் என்ற வஸ்துதான் இருதயக் கோளாறு ஏற்படுவதிலிருந்து பாதுகாப்பு தருகிறது என்று சொல்லப்படுகிறது.
டீயில் பால் சேர்க்கும்போது பலன் கிடைக்காமல் போய்விடுகிறதா என்பதை இனிமேல்தான் ஆராய்ச்சிகள் உறுதிசெய்ய வேண்டும்.
பிபிசி யில் இவ்வாறான செய்திகளை இனி நீங்களே பார்வையிடுங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக