புனத்தில் குஞ்ஞப்புல்லா எழுதிய ஸ்மாரகசிலகள் என்ற மலையாள புதினம் கேரள மற்றும் நடுவண் அரசின் சாகித்திய அகாதெமி விருதுகளை வென்ற புதினமாகும். இப்புதினம் தமிழில் நினைவுச்சிலைகள் என்ற பெயரில் சிவன் என்பவரால் மொழிபெயர்க்கப் பட்டிருக்கிறது. இந்நூலினைச் சாகித்திய அகாதெமி 2006 இல் வெளியிட்டிருக்கிறது.
புனத்தில் குஞ்ஞப்துல்லா என்பவர் எம்.பி.பி.எஸ் பயின்று மருத்துவத்தொழில் புரியும் மருத்துவர். 1940 இல் பிறந்தவர்.
கேரள சாகித்ய அகாதெமி விருதுபெற்ற மலைமுகட்டில் அப்துல்லா, மருந்து, நவக்கிரகங்களின்சிறை, குஞ்ஞப்துல்லாவின் குரூரச்செயல்கள், நரபலி ஆகாயத்தின் மறுபுறம், கதாபாத்திரங்கள், மேகக் கூடுகள் ஆகியன இவரது பிற படைப்புகள்.
இவர் இசுலாமிய சமூகத்தைச் சார்ந்தவர் என்பது கூடுதலாகப் பார்க்கப்பட வேண்டிய அம்சம். ஏனென்றால் புதினம் இசுலாமிய குடும்பத்தினைப் மையமாகக் கொண்டு சுற்றிச் சுழல்கிறது. இசுலாமிய குடும்பம் ஒன்றின் உயர்வான பண்புகளும் இழிவான பண்புகளும் என நிறை குறைகளை விமரிசனம் செய்யத் தயங்காத படைப்பு. தஸ்லிமா நஸ்ரினுக்கும் சல்மான் ருஷ்டிக்கும் ஏற்பட்ட அச்சுறுத்தல் ஏதும் கேரள இசுலாமியரிடத்திலிருந்து இவருக்கு ஏற்பட வில்லை என்பதிலிருந்து கேரளம் எவ்வாறு பண்பட்டிருக்கிறது என்பதை அறிய முடிகிறது.
ஒரு பழமையான மசூதி, மசூதியைச் சுற்றியுள்ள திடல், அங்கே புதையுண்டிருக்கும் அக்கிராமத்தைச் சார்ந்த இசுலாமியர்கள், அவர்களின் வழித் தோன்றல்களான வாழும் கதைமாந்தர்கள்…. மசூதி ஊழியனான எறமுள்ளான், சிங்கப்பூரில் தொழில் செய்து சம்பாதித்து தம் நிறைந்த சொத்துக்களோடு கேரளத்திற்கு தம் ஊரில் வசிக்கத் திரும்பிய பூக்கோயத் தங்கள், இவருக்கு நீண்ட நாட்களுக்குப் பிறகு குழந்தையைக் கருத்தரித்த மனைவி ஆற்றபீவி, காரியஸ்தன் பாப்புக்கணாரன், அவன் மனைவி பொக்கி, தங்களின் மகள் பூக்குஞ்ஞபி, கணவனில்லாமல் குழந்தை பெற்றவளான நீலியின் மகன் குஞ்ஞாலி ,சிங்கப்பூர் காரனான குதிரைக்காரன் அத்ராமான் ,கோமப்பன் வைத்தியர், ஒரே பெண் மருத்துவரான அலமேலு, குஞ்ஞூராமன் வக்கீல், பாத்தும்மா, புகாரி, பட்டாளம் இப்ராயி, தேநீர்க் கடைக்காரன் ஒன்பதரைக் கண்ணன் என இக்கதை பல கதை மாந்தர்களின் வாழ்க்கையை விவரித்துத் தொடர்கிறது.
இதே நாவலை மீசான் கற்கள் எனும் தலைப்பில் குளச்சல் மு .யூசுப் மொழிபெயர்ப்பில் காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது .படித்துப்பாருங்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக